பெயருக்குப் பின்னே அமைதி!-3

 

புதுதில்லியில் பணிபுரியும் செய்தியாளர் ஒருவர், தன் முதல் மகளுக்கு வியட்நாம் என்றும், இரண்டாம் மகளுக்கு திரிபுரா என்றும் பெயரிட்டார். இப்போது நாடாளுமன்றத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் வியட்நாம். இவர் ஆணா, பெண்ணா என அறியாமல் குழம்பி பலர் இவர் பெயருக்கு முன்னால் திரு என்ற அடைமொழியை சேர்த்தெழுதியதை கூறிப் புன்னகைக்கிறார். இப்படியொரு பெயர் ஒரு பெண்ணுக்கு இருக்க முடியாது என நினைத்த பீகார் எம்.பி. ஒருவர், அவரது அலுவலக அடையாள அட்டையை பார்த்த பிறகே நம்பினார்.
பெயரில் தன் சித்தாந்த அடையாளம் தெரியவேண்டும். அதே நேரம் தன் குழந்தை ஆணா, பெண்ணா என்பது பெயரிலிருந்தே அடையாளம் காண விரும்பிய மார்க்ஸிஸ்ட் உறுப்பினர், தன் முதல் மகளுக்கு ரஷ்யாதேவி என்றும் இரண்டாம் மகளுக்கு சீனாதேவி என்றும் பெயரிட்டார்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான இராவணன்கள் இருக்கிறார்கள். இதன் அரசியல் பின்புலம் வட இந்தியர்களை அதிச்சிக்குள்ளாகலாம். ஆரியர்களின் நாயகன் இராமன் எனில் திராவிடர்களின் நாயகன் இராவணன் என்பது இதன் உள் அரசியல்.(அதற்காக இராமன் கைவிடப்படவில்லை. இராம்குமார்களாக, இராமநாதன்களாக, இராம்களாக இப்போதும் இருக்கிறார்கள். உண்மையில் இன்று இராவணன் என பெயரிடுவதுதான் குறைந்து போய்விட்டது!)

திராவிட இயக்கத்தின் முக்கிய சாதனை சாதிப்பெயர்களை தங்கள் பெயர்களிலிருந்து நீக்கியதாகும். 1927-ல் நாயக்கர் என்ற அடையாளத்தைப் பெரியார் துறக்கிறார். 1928-ல் குடியரசுப் பத்திரிகையில் சாதிப்பெயர்களைத் துறந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை திருமணத்தின்போது சாதிப்பெயர்களை நீக்கவேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த இயக்கத்தின் சாதனை என்னவெனில் இன்று உள்ளூர சாதி உணர்வுடையவர்களும் தங்கள் பெயர்களில் சாதிப்பெயர்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை என்பதே.

                                                     தன் தாத்தா என்.ஆர்.சாமி வைத்த பெயர்களைப் பற்றி பேரன் பெரியார் சாக்ரடீசு சொல்கிறார். ”முதல் பேரனுக்கு தந்தை பெரியாரின் நினைவாக பெரியார் செல்வன் என்று வைத்தார். நிலவில் மனிதன் கால்வைத்த காலகட்டத்தில் பிறந்த காலகட்டத்தில் பிறந்த முதல் பேத்திக்கு நிலா அரசி என்றும், அதே காலகட்டத்தில் வெள்ளி கோளுக்கு மனிதன் செல்ல முயற்சித்தபோது பிறந்த பேத்திக்கு வீனஸ் ராணி என்றும் பெயரிட்டார். இங்கர்சால் பெயரை பெண் குழந்தைக்கு வைத்தார். என்னாரெஸ் பிராட்லா, சார்லஸ் பிராட்லா, லெனின், மேடம் கியூரி, புரூனோ என்னாரெஸ், வாலண்டினா என்றெல்லாம் அவர் பெயர் சூட்டியுள்ளார்” என்கிறார். அவர் மறைவுக்குப் பின் கொள்ளுப் பேத்திகளுக்கு தமிழீழம், தமிழ் இசை, இனியன் தமிழ் என்றவாறு பெயர்களை சூட்டி தாத்தாவின் பணியினைத் தொடர்கின்றனர்.
பெரியார் மீது அளவற்ற மரியாதையைக் கொண்ட ஒருவர் தன் மகனுக்கு பெரியார் வாழ்க எனப் பெயரிட்டார். தன் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தெரிவிக்கும் விதமாக தன் மகனுக்கு கடவுள் இல்லை எனப் பெயரிட, அந்த குழந்தையை சுருக்கமாக எல்லோரும் கடவுள் என்றழைக்க, பெயர் வைத்த அந்த தந்தை நொந்த சம்பவமும் உண்டு.
தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவர், தன் குழந்தைக்கு சாமி ஐயா என்றும் மற்றொருவர் கும்பிடறேன் சாமி என்றும் பெயர் வைத்தனர். எப்படி அழைத்தாலும் தனது குழந்தையை மரியாதைக் குறைவுடன் அழைப்பதற்கு வழியிருக்கக் கூடாது என்ற சிந்தனையே இதற்கு காரணம்.

தலைவர்களுக்கு மட்டுமல்ல

தாவரங்களுக்கும் நன்றி செலுத்துகிறவர்கள் தமிழர்கள்.

                                       வேலூர் ஊரீசுக் கல்லூரியில் படித்த ஒரு மாணவரின் பெயர் ஐ.ஆர்.எட்டு. பிரபலமான நெல் ரகத்தின் பெயர்! சற்றுக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் அவருக்கு இளங்கலை விலங்கியலில் இடம் கிடைக்க அவரது வித்தியாசமான பெயர் உதவியது.
மறைந்த மதுரை முன்னாள் எம்.பி  பி. மோகன் அவர்களின் மகள் பெயர் கங்கா காவேரி. இந்திய அரசு எப்போது கங்கையையும், காவேரியையும் இணைக்குமோ தெரியாது ஆனால் என் மகளின் பெயரில் நான் அதை இணைத்துவிட்டேன் என்றார்.
மிக வினோதமாக பெயர்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் தொண்ணூறுகள் வரை நவீன இலக்கியவாதிகளிடம் காணப்பட்டது. ஜூலியஸ் பால் கரிகாலன், கிளாடியஸ் குலோத்துங்கன், சுரேஷ்குமார் இந்திரஜித், சாத்தியகி, கரியமால், ஆற்றங்கரையான், உறங்காப்புலி, கதம்பவனம், மஞ்சக்காளை போன்ற பெயர்கள் தமிழகத்தில்தான் வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் உங்களை ஆச்சர்யப்படுத்தலாம்.

கொள்கைகள், அரசியல், சாதிவிடுதலை தாண்டி சமூகக் காரணங்கள் பெயர்களைத் தீர்மானிக்கும் போக்கும் தொடரவே செய்கிறது. தேனியில் பாப்பாத்தி என்ற பெயர் அதிகம். அறுபதுகளின் இறுதியில் இந்திப் படங்களின் பாதிப்பால் கிஷோர், ரமேஷ், ராஜேஷ் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. இளையராஜா, பாரதிராஜா பிரபலத்திற்குப் பின் தேனியில் இப்பெயர்களை வைக்கின்றனர். 1980 களில் ஈழப்போராட்டத்தின் விளைவாக பிரபாகரன் என்று பெயர்சூட்டப்பட்ட பல பேர் இன்று தமிழகம் முழுமையுமாய் இருக்கிறார்கள். இப்போது பேரறிவாளன் என்ற பெயரையும் வைக்கிறார்கள்.

தலைவர்களின் பெயர்களை நினைவுகூர்வதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை.

கோவை, ஈரோடு, நாமக்கல்லைப் பொறுத்தவரை மணி என்ற பெயர் வைத்தவர்கள் அதிகம் இருப்பார்கள். ஒருவரை மரியாதையாக கூப்பிடுவதற்கு மணி என அழைப்பதுண்டு. பெண்களைப் பொறுத்தவரை ஊர்ப்பெயரிலிருந்து வைக்கும் வழக்கம் உண்டு.

ஆனால் இன்று தமிழகத்தில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. தூய தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டாலும்கூட, புரட்சிகர சிந்தனையாளர்கள், கம்யூனிச தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவது குறைந்து வருகிறது. சமஸ்கிருத, வட இந்தியப் பெயர்களைச் சூட்டுவது நவநாகரிகமான பொருளாகிறது.

ஒரு சமூகத்தின் ஆசைகளும், கடந்தகால நினைவுகளும், எதிர்பார்ப்புகளும், அழகுணர்ச்சியும், நம்பிக்கையும் மனிதப் பெயரிடும் வழக்கத்தில் பொதிந்துகிடப்பதைக் காணமுடியும்.

பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவை ஸ, ஜ, ஷ, ஹ, ஸ்ரீ அகிய ஒலிகள் மீது ஏற்படுத்திய போலிக் கவர்ச்சிகள் முதலான பல்வேறு காரணிகளால் தமிழர் பெயரிடும் மரபு பாதிப்புக்குள்ளாகிறது. ஆயினும் கண்ணன், சாத்தன், குமரன், நாகன், மருதன் ஆகிய பெயர்கள் ஈராயிரம் ஆண்டுகளாயும் தொடர்கின்ற தமிழ்ப்பெயர்களாகும்.
                                நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீராமை பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் எப்போது பெயர் சொல்லி அழைத்தாலும் சற்று வினோதமாகத்தான் பார்ப்பார்கள். கேலியும் செய்வார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. காரணம் ஸ்ரீராமின் முழுப்பெயர் ஸ்ரீராம் பென்னிகுயிக். தென்தமிழகத்தில் பலரும் பென்னிகுயிக்கின் பெயர்களை முன்னமே வைத்துள்ளார்கள். தேனி மாவட்டம் பாலார்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன், பென்னிகுயிக் பெயரைத் தன் குழந்தைக்கு வைக்கமுடியவில்லை என வருத்தப்படுகிறார். காரணம் அவருக்குப் பெண் குழந்தை. அதனால் பென்னிகுயிக்குடன் இணைந்து பணி செய்த பொறியாளர் லோகன் துரையின் பெயரைச் சுருக்கி ‘லோகனா’ என்று பெயரிட்டுள்ளார்.
இப்போதெல்லாம் குறிப்பிட்ட எழுத்துகளுக்குள்தான் பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கப்படுவதால்தான் பெயரிடும் சுதந்திரமும் குறைகிறது. இதில் எண்கணிதங்களும் சேர்ந்து மனிதர்களைக் குதறித்தள்ளுகின்றன.

இக்கட்டுரையைப் படிப்பவர்களாவது மனம் மாறினால் இதை எழுதிய பயன் முழுமையுறும்.

ஆதாரம்: 04-03-2012 தசஇ

பெயருக்குப் பின் அமைதி தொடர் முற்றிற்று.

இந்த கட்டுரைகளின் முழுமையான தொகுப்பை த சன்டே இந்தியன் தமிழ் பதிப்பில் காணலாம்.

அதன் செய்தி ஆசிரியர்களுக்கும், பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களுக்கும் நன்றிகள்.

கருத்துகளை எதிர்பார்த்து,

தமிழ்

 

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s