ஆடித் திருநாள்!

இதோ, ஆடி  18. இந்த நாள் ஒருவேளை தற்போது வெகு சிறப்பாய் இல்லாமலிருக்கலாம். ஆனால் சிறப்பாய்தானிருக்கிறது. கல்கி அவர்கள் எழுதிய சோழ நாட்டு நாவலான “பொன்னியின் செல்வனை” கொஞ்சம் படித்தவன் என்கிற முறையில் ஆடித்திருநாள் தலைப்பில் அவர் எழுதிய முதல் அத்தியாயத்திலிருந்து சில வரிகள்…….

………………….. ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்…………………….

………………….. ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. ………………….

………………………………….

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி
இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வௌியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.

“வடவாறு பொங்கி வருது

வந்து பாருங்கள், பள்ளியரே!

வெள்ளாறு விரைந்து வருது

வேடிக்கை பாருங்கள், தோழியரே!

காவேரி புரண்டு வருது காண

வாருங்கள், பாங்கியரே!”
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

*************************************************

கல்கி இன்னும் வாழ்வார். இறவாப் புகழ் கொண்ட அவர் எழுத்துக்கள் வழியே.  அன்புத் தோழர் @oojass -க்கு இதயத்திலிருந்து நன்றிகள்

Advertisements

9 comments

  1. பதினெட்டாம் பெருக்கு என்று கலந்த சாதங்கள் செய்துவிட்டு, வந்து கணணி முன் உட்கார்ந்தால் உங்கள் பதிவு! காவிரிக்கரையில் வந்தியத்தேவனுடன் அங்கு நடக்கும் கோலாகலங்களை நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டீர்கள்!
    கல்கியின் ‘பொன்னியின்செல்வன்’ போனதலைமுறையிலிருந்து இந்த இளைய தலைமுறை வரை இதயத்தைக் கொள்ளை கொள்ளுவது வியப்பேதும் இல்லை. அது அமர காவியம் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதும்.
    இந்த நன்னாளில் காவிரியையும் பொன்னியின் செல்வனையும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல!

  2. அன்பில் இனியவருக்கு, தங்கள் மறுமொழிக்கு மனதிலிருந்து நன்றிகள். கல்கியின் எழுத்துகள் எத்தனைத் தலைமுறை கடந்தும் ஈர்க்கும் வல்லமை உடையது. எனக்கு அவரை அறிமுகம் செய்த அருமைத் தோழன் ஓஜஸ்-க்கும், தொடர்ந்து சிறந்த பதிவுகள் இட ஊக்கம் செய்த உங்களுக்கும் நன்றிகள்

  3. ஏற்கனவே பல முறை சொல்லிவிட்டேன், மறுபடியும் சொல்கிறேன், கல்கியால் மட்டுமே தமிழ் பக்கம் ஈர்க்க பெற்றவன் நான். அதனால் உன்னையும் அவர் பக்கம் இழுத்தேன். நீயும் மயங்கி விட்டாய். அவர் எழுத்தோவியத்திற்கு மயங்கவாதவர்களே இல்லை எனலாம். நான் சொல்லி நீ இந்த பதிவி செய்தது, எனக்கு மகிழ்ச்சி. மேலும் உன் வெற்றிகளும், எழுத்துகளும் தொடர வாழ்த்துகள் – அன்பு நண்பன் ~ நாற்சந்தி ‘ஓஜஸ்’

  4. ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. ………………….

    ………………………………….
    படிக்கும் போதே ஆனந்தம் வெள்ளமென மனதில் பாய்கிறது…

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s